ராமாயணம் எத்தனையோ பேர் எவ்வளவோ விதங்களில்
எழுதி இருந்தாலும் எல்லாவற்றிலும் (வால்மீகியைத் தவிர) ராமனை ஒரு
அவதாரமாகவும்,
கடவுளாகவும், அனைத்தும் அறிந்தவனாகவுமே காட்டப்படுகிறது. நம்
இந்தியக் குழந்தைகளுக்கு இரவு நேரப் படுக்கைக்குச் செல்லும் முன்னர்
பாட்டிமார்களால் சொல்லப்பட்டதால் அவற்றில் ஆஞ்சநேய ப்ரபாவம் அதிகமாகவும்,
விந்தைகளும், அற்புதங்களும் நிறைந்ததாகவும் சொல்லப்பட்டு வந்தது; ஆனால்
ஶ்ரீராமன் அவன் வாழ்ந்த காலம் முழுமைக்கும் ஒரு சாதாரண மனிதனாகவே அனைத்து
மக்களும் துன்பப் படுவது போல் துன்பங்களை அடைந்து சகித்துக் கொண்டு,
மனைவியைப் பிரிந்து, பின்னர் அவளை மனமார சந்தேகங்கள் ஏதுமில்லாமல்
ஏற்றுக்கொண்டும் அவளோடு வாழ முடியாமல், வாழ்நாள் முழுவதும் அவள் நினைவிலேயே
கழித்து என்று இருந்து வந்திருக்கிறான். ராமன் நினைத்திருந்தால் அவனுடைய
அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி சீதையைத் தன்னோடு வாழ அனுமதித்துக் கொண்டு
அவளுடன் சந்தோஷமாகவும், இன்னும் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டும்
இருந்திருக்கலாம்.
அவன் நினைத்திருந்தால் சீதையை விடுத்து
இன்னொரு பெண்ணைத் தேடி மணந்திருக்கலாம். அல்லது சீதையை ராவணன்
பிடியிலிருந்து விடுவித்த உடனேயே அவளை வெளியேற்றி இருக்கலாம். ஆனால் அப்படி
எல்லாம்செய்யாமல் அவளோடு வாழத்தான் நினைத்தான். அது அவனுடைய சொந்தக்
குடிமக்களிடையே தோற்றுவித்த சலசலப்புத் தான் சீதையை அவன் பிரியக்
காரணம்.பலரும் சீதையின் மனம் இதை நினைத்து வருந்தி இருக்குமே; ராமனின்
அராஜகத்தைப் பொறுத்துக் கொண்டாளே என்றெல்லாம் கேட்பதோடு அவளை அக்னிப்
பிரவேசத்துக்கு உட்படுத்தியதும் ராமனே என்னும் தவறான எண்ணத்திலேயே இருந்து
வருகின்றனர். ஆனால் மூல ராமாயணமான வால்மீகி எழுதியபடி ஶ்ரீராமன் அவளைத்
தீக்குளிக்கச் சொல்லவே இல்லை. சீதை தான் தானாக முன் வந்து
தீக்குளிக்கிறாள். இதை எழுதியபோது எனக்குப் பல கண்டனங்கள் வந்தன. ஏனெனில்
அனைவருமே இப்போதைய 21 ஆம் நூற்றாண்டோடு சீதை இருந்த காலத்தை ஒத்துப்
பார்ப்பதே காரணம். இதில் பலருக்கும் ராமாயணம் என்பது ஒரு கதை தான் என்றும்
இட்டுக்கட்டின கதை என்றுமே கருத்து. அப்படிக் கருத்துள்ளவர்கள் தான் இந்தக்
கேள்வியைக் கேட்கின்றனர். இட்டுக்கட்டின கதையில் இப்படி எல்லாம் வரக்
கூடாதா? இதை விடக் கொடுமைகள் எல்லாம் தற்காலத்தில் நாகரிகம் முற்றிய இந்த
21 ஆம் நூற்றாண்டில் நடந்து வருகின்றன. அப்படி இருக்கையில் ராமர் வாழ்ந்த
காலத்தில் இப்படி நடந்திருக்கலாம் என்பதில் ஆச்சரியம் என்ன? சீதை தன்
கணவனின் ராஜரிக தர்மத்தைப் புரிந்து கொண்டதாலேயே விலகி வாழச்
சம்மதிக்கிறாள். தற்கால நடைமுறைப்படி mutual separation.
ஆகவே படிப்பவர்கள் வால்மீகி காலத்தை மனதில்
கொண்டு படிக்க வேண்டும் என்பதோடு அதில் உள்ள நீதிகள், அரச தர்மங்கள்,
அரசனுக்குரிய கடமைகள், நீதி பரிபாலனங்கள் ஆகியவை தற்காலத்துக்கும்
பொருந்தும்படியாக இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். சாரத்தை விட்டு
விட்டுச் சக்கையை எடுத்துச் சாப்பிட வேண்டாம். மேலும் நான் எழுதி இருப்பது
முழுக்க முழுக்க வால்மீகி ராமாயணமே. ராம பட்டாபிஷேஹம் வரையிலும் கம்பன்,
துளசி, அருணகிரிநாதர் ஆகியோரின் ஒப்பீடுகள் இருக்கும். நான்
முன்மாதிரியாகக் கொண்டது அர்ஷியா சத்தார் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய
ராமாயணப் புத்தகம். அந்தப் புத்தகமும் நான் எழுதுகையில் என்னிடம் இல்லை.
படித்தவற்றைக் குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டு விரிவாக்கம் செய்தவையே.
அவ்வப்போது இணையத்தில் கிடைத்த வால்மீகி ராமாயணம் தளம் பேருதவி செய்தது.
இதைத் தவிரவும் கம்பராமாயணம் இணையத்திலிருந்தும், திருப்புகழ் கெளமாரம்
தளத்திலிருந்தும் பேருதவியாகப் பயன்பட்டன.
சீதையின் அக்னிப்ரவேசம் குறித்த விளக்கக்
கட்டுரையைக் கொடுத்து உதவியது சிங்கை குமார் என்னும் சகோதரர். அதற்குத்
தேவையான ஒதெல்லோ நாடகப் பகுதியைத் தேடி எடுத்துக் கொடுத்தது (கடலூர்) திரு
திருமூர்த்தி வாசுதேவன். இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி. மற்றும்
திருப்புகழைத் தேடி எடுத்து உதவிய (கரோலினா, ராலே) டாக்டர்
சங்கர்குமாருக்கும், திரு புஷ்பாராகவனுக்கும் (தற்சமயம் மும்பையில்
உள்ளார்) என் நன்றி. தெரியாத இடங்களில் பொருள் சொல்லி உதவிய திரு சிவசிவா
என்னும் சகோதரர் சுப்ரமணியன், (நியூ ஜெர்சி) அவர்களுக்கும் என் நன்றி.
ஆசிரியர் :கீதா சாம்பசிவம்.
மின்னஞ்சல்: geethasmbsvm6@gmail.com